
பச்சை தாவணி போர்த்திய ஒரு
வயல் வெளியின் நடுவினிலே
ஓங்கி வளர்ந்து நின்ற ஒரு
தென்னை மரத்தின் நடுவினிலே
அணில்கள் ஓடும் காட்சியினை கண்டேன்.
இச்சை கொண்டு சத்தம் இன்றி
அதனருகினில் நடந்து செல்கையிலே
மரத்தினை சுற்றி நூறடியில் படிகள்
கொண்ட கிணற்றின் அருகினிலே
குயில்கள் இரண்டு கொஞ்சிக் குலாவியதை கண்டேன்.
ஆடை களைந்து கிணற்றில் இறங்கி
நீச்சல் பயில நினைக்கயிலே
நீலக்கடலில் துயிலெழும் ஞாயிறைப் போலே
தாவித் தாவி குதித்துக் கொண்டிருக்கும்
இரு தங்க மீன்களை கண்டேன்.
கிணற்றுப் படிகளில் அமர்ந்திருக்கையிலே
படிகளின் இடுக்கில் பூத்திருக்கும் பூக்களின்
தேனினை சுவைக்க வரும் வண்டை,
மடை திறந்த வெள்ளம் பாய்வது போல்
இந்த பேடை கண்டிட்டேன்.
நீ வரும் வரை காத்திருத்தலில்
இவையாவும் நான் தொலைந்த கதையன்றோ.
நீ வந்தாய்; பின் நின்று
என்கண் மறைதிட்டாய்;
கண்டு பிடி என்று ஏவல்லிட்டாய்.
நூறு காத தூரம் நீ தாண்டி நடக்கையில்
உன்னை அறிந்து கொண்டவன்
இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தில்
தவறவிடுவேனா?
விரல்களின் கிரீடத்தில் வண்ணம் பூசியிருக்கும்
நறுமணத்தில் அறிந்து கொள்வேன்
பிறந்த மழலையின் உள்ளங்கை மணத்தைப் போல்
உன்கைகளின் நறுமணத்தில் அறிந்து கொள்வேன்
வளையல்கள் உரசும் சத்தத்தில் அறிந்து கொள்வேன்
பட்டு தாவணி என் மேனி மறைப்பதில் அறிந்து கொள்வேன்
நின் பேச்சின் இனிமையில் அறிந்து கொள்வேன்
இன்னும் ஆயிரம் விதத்தில் உன்னை அறிந்து கொள்வேன்.
இருந்தும் ஒரு விளையாட்டு..
நான் யார் என்ற உன் கேள்விக்கு
உன் தோழி பெயரை உரைத்தேன்..