Thursday, November 25, 2010

இரவு இன்றோடு முடிந்தது




உலர்ந்த
காலை பொழுதில் இலையிலோடும்
வெண்பனியல்ல நான்; பொன்கதிர் நான்;
அணு வெடித்து சிதறியதால் வந்த
மிட்சமல்ல நான்; ஆதியும் அந்தமும் நான் ;

இறைச்சிக்காக வெட்டப்படும் கஸ்தூரி
மானல்ல நான்; கானகம் காக்கும் காவலன் நான்;
குதித்து தற்கொலை செய்து கொள்ளும்
கண்ணீரல்ல நான்; கண்ணின் மணி நான்;

சித்திரம் எதுவாயினும் அதன் வண்ணம் நான்;
உருவம் எதுவாயினும் அதன் மூலம் நான்;

அறியாமல் இப்படி
சொப்பனத்தில் எத்தனை நான்?

இந்த இரவு இன்றோடு முடிந்தது
காலை புலர்ந்ததால்.

Tuesday, November 23, 2010

சின்ன சின்ன நன்றிகளில்


மொழி தெரியாத பொழுது பலமுறை
இப்பேருந்து இந்நிருத்தத்தில் நிற்கும் என்றுரைத்த
பல நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்.

அழைத்ததும் விடியற்காலை என்று பாராமல்
என்னை வழியனுப்பி வைத்த நண்பர்களுக்கு
ஆயிரம் நன்றிகள்.

யாரென்று தெரியாது இரண்டு மணி நேர
பொழுதை கழிக்க விகடன் அளித்து உதவினார்ஒருவர்
அவருக்கு ஒரு நன்றி.

துளிர்விட்ட செடியை சக்கரத்திற்கு இரையாக்காமல்
தடுத்த ஏதோ ஒரு நல்ல உள்ளத்திற்கு
சில நன்றிகள்.

மறைத்து வைத்து என்ன பயன்?
சொல்லுவதால் ஒரு நிமிடம் புன்னகை செலவாகும்
பரவாயில்லை. இருந்தும் சொல்லுவோம்.

சின்ன சின்ன நன்றிகளில்
சிநேகம் துளிர்க்கட்டும்.

Monday, November 22, 2010

தேய்பிறை




ஒவ்வொரு யாத்திரையிலும் ஓர் ஊர் அறிந்தேன்
ஒவ்வொரு நதியிலும் ஓர் சுவை அறிந்தேன்
ஒவ்வொரு உறவிலும் ஓர் உண்மை உணர்ந்தேன்
எங்கும் செல்லாமல் எப்படி உணர்ந்தேன் உன்னை?

வெயிலா பனியா முகில் தவழும் மலைதேசமா?
கடலை புயலா நிலவு தவழும் இருள்தேசமா?
காற்றா மழையா கற்கள் சூழ்ந்த பாறைதேசமா?
எங்கும் தேடாமல் எங்கு கண்டேன் உன்னை?

சிற்பமா சித்திரமா இதில் ஏதேனும் ஆர்வம் உண்டா?
பரதமா பாடலா இதில் உனது உயிரும் உண்டா?
கவியா? கல்வியா? இல்லை உலகுனர்ந்த அறிவிலா?
எந்த கலையும் கற்காமல் எப்படி கற்றேன் உன்னை?

அன்பா அழுகையா இல்லை கோவமா வீரமா?
பரிவா தாழாட்டா இல்லை பார்வையா பயமா?
இதயமா மூளையா இல்லை உயிரணுவை சிதைக்கும் காதலா?
எந்த உணர்வும் தெரியாமல் எதில் உணர்ந்தேன் உன்னை?

இன்று:
எப்படி இழந்தேன் உன்னை?
உணர்வற்ற உயிர் சுமந்து நடக்கும் எனை
இனி எப்போது காண்பாய்?