Wednesday, March 25, 2009

சென்னைபட்டினம்

எத்தினி பேர்... நீ போ அண்ணாத்தே.. சால்னா கூட துன்ன முடியாது... என்ன சார்.. ஆட்டோ'வா.. ஹும்.. அங்க எல்லாம் சவாரி வராது.. பீச்சாண்ட போலாமா... பிரச்சனை பெஜாராயிரும்.. சில கெட்ட வார்த்தைகள்..

Hey.. wts up dude.. Sathyam all shows house full machan.. Mokha.. Minus one.. Lets have party.. Harley Davidson.. Audi.. wow.. Machi treat enga?... சில கெட்ட வார்த்தைகள்..

வெள்ளிக்கிழமை.. சதுர்த்தி.. கோயிலுக்கு போநியோ இல்லியோ... ஞாயிற்றுக்கிழமை சரவணபவன் வத்தை கொலம்பு எய் பார்த்தசாரதி.. நாழிஆயிடுத்து...அம்மா இன்னைக்கு கொஞ்சம் தயிர் சாதம் ஊறுகாய்... சிலசாபங்கள்..

வண்டிய ஓரங்கட்டு... License.. R.C Book.. insurance.. ஓரமா நட.. நடக்கும்போதும்ஹெல்மெட் போட்டுக்க.. C.M Route.. traffic clear pannanum.. நிக்காதே நவுரு... V.I.P. வீட்டு gate உடன் உறவாடும் பல காக்கிச்சட்டைகள்.. சில கெட்ட வார்த்தைகள்..

தி.நகர்.. சரவணா ஸ்டோர்ஸ்..போத்திஸ்.. ரஜனி படம்.. T.V. சீரியல்.. நெரிசலானவீதியில் பவர் கட்.. மொட்டைமாடியில் முழு வருட படிப்பு.. பேருந்து படிக்கட்டில்பெண்களும் பயணம்.. சில கெட்ட வார்த்தைகள்...

தலைவர் வாழ்க.. இந்த படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா.. தமிழுக்குஉயிர்.. மண்ணுக்கு உடல்.. சாகும் வரை உண்ணா விரதம்.. அய்யா வழி தனி வழி... தீவுத்திடலில் பொதுக்கூட்டம்.. சில கெட்ட வார்த்தைகள்...

இவர்கள் எல்லோருடனும் ஒவ்வொரு ஊரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள்.. சினிமா கனவிலும், வெளிநாடு மோகத்திலும், கனவுகளை பின்தொடர்ந்தும், இன்னும் ஏராளமாய், கூட்டம் கூட்டமாய்.. ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எப்போது? எதற்கும் விடை தெரியாத ஒரு மக்கள் கூட்டம்.. இவர்களுக்கும்ஒட்டிக்கொள்கிறது சில கெட்ட வார்த்தைகள்...

வானவில் போல் வெவ்வேறு விதமான மனிதர்கள.. பழக்க வழக்கங்கள்.. தொலை நோக்கு சிந்தனையுடன் பாலம் கட்டும் பணிகள்.. அளவோடுஆர்ப்பரிக்கும் கடல்..

கருவிலே கலைக்காமல் இன்று தெருவிலே திரியும் சில குழந்தைகள்.. அவர்களுக்காகவே கருணை மாறாத சில உள்ளங்கள்.. இன்னும் ஏராளம்.. என்னுடைய முதல் வேலை.. பிரம்மச்சரிய வாழ்க்கை.. இதற்காக இந்த நகரத்தைபிடித்திருகிறதா?? பிறந்த ஊர்.. குடும்பம்.. நண்பர்கள்.. மற்றும் பலர்.. பிரியகாரணமான இந்த நரகத்தை பிடித்திருகிறதா?? தெரியவில்லை.. இருப்பினும்என்னை பொறுத்த வரையில்.. இது ஒரு விநோமான நகரம்.. ஏன் பார்வைக்கு இங்கு நாளும் ஒவ்வொரு வர்ணம்..

Sunday, March 15, 2009

என் சமையலறையில்

இதோ இன்று ஞாயிற்றுக்கிழமை.
8 மணிக்கெல்லாம் எழுந்தாகிவிட்டது.
சமையல் செய்ய சமையற்காரர்
வரவில்லை. நானே சமைக்கலாமா?

நூடுல்ஸ்!@#$%
ம்.. வேண்டாம்.

புது மாப்பிளையின் எதிரி
"உப்புமா" வை கொஞ்சம் செய்து பார்க்கலாமே.
மிகவும் சுலபம்
(பின் குறிப்பு:
சமையல் தெரிந்தவர்க்கு).
அம்மாவும் தங்கையும் எழுதிக்கொடுத்த நோட்ஸில்
தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கியாயிற்று.
மணி 9.15.

வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு,
கோதுமை இரவை, தண்ணீர்
என்று ஒவ்வொன்றாக ஒரு தட்டில் எடுத்து வைத்தேன்.
வட சட்டி எடுத்து வைத்து
காஸ் ஸ்டோவ் பற்ற வைத்தேன்.
மணி 9.45.

ஒருவர் சாப்பிட எண்ணெய் 2 ஸ்பூன்
என்று எழுதி இருந்தது.
அதே போல் செய்தேன்.
ஒரு நிமிடம் முற்று பெற்றதும்
கடுகு போடசொல்லிஇருந்தது.
அதே போல் செய்தேன்.
மணி 9.47.

முப்பது வினாடிகள் பாற்றுக்கொண்டே
நின்றேன்.
அதுவரையில் நன்றாகத்தான் இருந்தது.
திடீரென்று,
அம்பி போல் இருந்த எண்ணெய்,
அந்நியன் போல் உருமாறி
எரிய ஆரம்பித்துவிட்டது.

என் கண் முன்னால்
சமையலறையில் ஒரு யாகம்..
என்ன செய்வது என்றறியாமல்
அடுப்பை அணைத்து
தண்ணியை உற்றினேன்..
தீ அணையவேயில்லை. ம்..
சட்றென்று தோன்றவில்லை
எரிவதற்கு காரணம் எண்ணெய் என்று.

அந்த பாத்திரத்தை எடுத்தேன்.
நீங்கள் எதிர்பார்த்தது தான்.
கைகளை சுட்டுக்கொண்டேன்.
மணி 10.15.
தீயின் அரங்கேற்றம் முடிந்திருந்தது.
உற்று நோக்கினேன்
பாத்திரத்தையும் என் கைகளையும்,
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
ஒரு 15 நிமிடம் அமைதியாக இருந்தேன்.
மணி 10.30.

மதியம் 1 மணியளவில் பழரசம் அருந்திவிட்டு வந்தேன்.
என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பிடுவதற்கு
அதிகம் சிரமப்பட்டதும், குறைவாக சாப்பிட்டதும்
அன்றைக்குத்தான்.

அடுத்த நாள் காலை மணி 7.30
சமையற்காரர் கேட்டார்
" என்ன தம்பி, நேத்து சமைசீங்க போலே. பாத்திரம் எல்லாம் Make-up போட்டிருக்கு?????"
சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல்
"உப்புமா செஞ்சுருங்க" என்றேன்

Wednesday, March 11, 2009

குலாப் ஜாமூன்


http://satts.files.wordpress.com/2008/05/gulab-jamun.jpg


யாருடைய கல்யாணம்
என்ற ஞாபகம் இல்லை
இருந்தும் நினைவில் இருந்து
அகலவில்லை உன் முகம்
.

பாவாடை தாவணி,
ரெட்டைஜடை பிண்ணி
இரண்டு முலம் மல்லிகை பூ,
காதிற்கும் கன்னத்திற்கும் பாலமாய்
கம்மலும் ஜிமிக்கியும்,
அளவான ஆனால்
அழகான அலங்காரம்.

ஒவ்வொரு முறை நீ
தாண்டிச்செல்லும் போதும்,
எனக்கு மட்டும் கேட்கும் விதமாய்
ஒரு மெல்லிய இருமல்,
சிரிக்கிறாய் நீ...

புகைப்படம் எடுப்பவரிடம்
தப்பித்து என்கண்களில்
மட்டும் தட்டுப்படுகிறாய்.
பின்பு வெட்கப்பட்டு
சிரிக்கிறாய் நீ...

நான் பரிமாறும் சமயம்
உன் இழையில் மட்டும்
கூடுதலாய் ஒரு
"குலாப் ஜாமூன் "
சிரிக்கிறாய் நீ...

மூன்று மணிநேரம்தான் நீ
மண்டபத்தில் இருந்தாய்
இப்பொழுது கிளம்பப்போகிறாய்
வழியனுப்ப வந்தவன்போல்
எதேச்சையாய்
வாசல் வந்தேன்..
கை அசைத்தேன்..
சிரிக்கிறாய் நீ...

மகிழ்ச்சியுடன் சற்று மண்டபத்தினுள்
உற்று நோக்கியதும்தான்
உண்மை தெரிந்தது
ஒவ்வொரு ஜன்னலிலும்
என்னை போல்
"குலாப் ஜாமூன்"
தொலைத்தவர் எண்ணிக்கை.



Tuesday, March 3, 2009

ம்.. போகாதே..


http://farm1.static.flickr.com/148/369607669_c4e8957d2d.jpg?v=0

நான்
போகட்டா..
ம்.. போகாதே..

ஒவ்வொரு நாளும்
விட்டுப்பிரியும் நாளில்
இவை
நீ சொல்வதும்
நான் சொல்வதும்

இரு கைகளில் உன்னை ஏந்திக் கொண்டு
கொஞ்சும் மொழி பேசுவதும்
செல்லமாய் உன் பேர் உரைப்பதும்
கன்னம் கிள்ளி விளையாடுவதும்
எத்தனை பேரானந்தம்.

விரல் தொடுவதும்
பின்கை பிடிப்பதும்
முடி கலைவதும்
அதை நேர்செய்வதும்
எத்தனை இனிமை.

பத்து அறை கொண்ட என் வீடு
ஒரு சிறை போல்தான் தெரியும்,
நான் தனிமையில் இருக்கும் வரை.
நீ வந்து ஒளிந்துகொண்டு
உன்னை தேடும் சமயம்,
ஒவ்வொரு அறையும்
ஓர் அரண்மனை.

நேற்று,
ஓடி வந்து என் மடி அமர்ந்தாய்
எத்தனை பரவசம்.
இதோ,
இன்றென் பேர் உரைத்தாய்
என்னுள்ளே ஆயிரம் வாட் மின்சாரம்.
நாளை,
என்செய்வாய் என்கண்மணியே.
காத்திருப்பேன்,
உன் அம்மா இவ்வாறு உன்னை
விளிக்கும் வரை...

"குழந்தை நாளைக்கு வந்து விளையாடடும்ங்க.
இப்ப கொஞ்ச நேரம் தூங்கட்டும்".

Monday, March 2, 2009

சென்ட்ரல் station

http://www.chennaipost.com/wp-content/uploads/2008/05/chennai-central-station-800px.jpg

சீக்கிரம் வாடா..
மாப்பிள்ளை
சீக்கிரம்...
வண்டி கிளம்பிட போகுது..

சுருதி பிசகாமல்
வாரம்
தவறாமல் நான்
சொல்லும் வார்த்தைகள்.

பிறந்த ஊர், பிறந்த வீடு,
பெற்றடுத்த தந்தை தாய்,
உடன்பிறந்த ஓரே இரத்தங்கள்,
ஓரே அலைவரிசை உள்ளங்கள்,

இவர்கள் எவரும் ஏதும் உரைப்பதில்லை.
இவர்கள் அல்லாத உயிர்கள் மட்டும்
உரக்க கேட்பர்

என்ன வைத்திருக்கீறீர்கள் உங்கள் ஊரில்?
யார் இருக்கிறார்கள் உங்கள் ஊரில்?
என்ன செய்வீர்கள் உங்கள் ஊரில் ?

இதோ அவர்களுக்கு என் பதில்.

மகிழ்ச்சி...
என்னை தவிர எல்லோரும்...
சந்தோஷமாய் இருப்பேன்...

உலகத்தின் ஓரே Oscar தமிழன்
உலகத்தின் ஓரே Olympic தங்கப்பதக்க இந்தியன்
என்ற பெருமிதம் மனதுக்குள் இருந்தாலும்
இரயில் நிலையம் வந்து இறங்கியதும்
யாரிடத்திலும் விளம்பரப்படு்த்துவதில்லை

நான் இன்று வந்தேன்;
நாளை மீண்டும் சென்றுவிடுவேன்;

மழை இல்லை;
வெயில் அதிகம்;
இந்த தொன்றுதொட்ட கேள்விகள் எல்லாம்
மற்றவர் கேட்காமல்
நானாக விளம்பரப்படு்த்துவதில்லை.

பயணங்கள்
இரவில் தொடங்கி விடியலில் முடிவதால்
வந்து போக வந்து வந்து போக
எனக்கு சிரமங்கள் தெரிவதில்லை.

மற்றவர் கண்களுக்கு ஏனோ
விதவிதமாய் தோன்றுகிறது

"என்று தனியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்"

என்று நான் பாரதி போல் கூவப்போவதில்லை
உள் மனதுக்குள் வேந்து நொந்து கொல்வதோடு சரி

மீண்டும் அடுத்த வாரம்
சந்திப்போம்.

மாப்பிள்ளை ஸ்டேஷன் வந்துடுச்சு
தூங்குனது போதும் எழுந்துருடா..
இறங்கனும்..