Monday, January 31, 2011

வெறுமை

ஒவ்வொரு நாளும்
சேகரித்து வைத்த வார்த்தைகள்,
தேக்கி வைத்த ஆசைகள்,
கனவுகள், இன்னபிற நினைவுகள்
காற்றில் கலந்துவிட்டது.
இன்று ஏதுமின்றி வெறுமையில்.

கேட்பதோ, கொடுப்பதோ,
சிரிப்பதோ, அழுவதோ,
தொடுவதோ, இல்லை
உயிர் உருகி கரைவதோ,
இன்னபிற 'தோ' எல்லாம்
நெருப்பில் எரிந்துவிட்டது.
இன்று ஏதுமின்றி வெறுமையில்.

தொலைந்து போன தருணங்களை
தேடி திரிகையில், வயதின் முதிர்ச்சி
பார்வையிலும், இன்ன பிற உறுப்புகளிலும்.

Sunday, January 23, 2011

மன்மதன் அம்பு

பல நிமிடங்களுக்கு முன்பு
இடது கன்னத்தில் ஆரம்பித்து
வழியில் இரு உதடுகளை கடந்து
இன்னும் வலது கன்னத்தை அடைந்தபாடில்லை.

சத்தம் இல்லாமல், எச்சில் படாமல்
முத்த பரிமாற்றம் அறங்கேறிகொண்டிருக்கிறது.

கோலம் இடுவது யாதென எத்தனிக்க
முயன்று தோல்வியுற்றேன்; ஏமாந்தும் போனேன்.

நீ உனது விரல்களால் விளையாடிகொண்டிருக்கிறாய்.
கண் விழித்து பார்த்தேன்; மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்.
எதிரிலே நீ உறங்கி கொண்டிருக்கிறாய்.

சொப்பனம்தான் என்றாலும் எனது
இத்தனை வருட விருட்சம்
ஒரு நாழிகையில் சாம்பலானது.

Wednesday, January 19, 2011

எங்கு சென்றனர்





வாழ்ந்தாகிவிட்டது
வயோதிகம் எங்களுக்குள்
புது வடிவம் எடுத்தது

இரணப்பட்டு கிடக்கும்
நம் மனதில் இனி
மரணம் ஒன்றுதான் நிம்மதி

தள்ளாடிச் சென்று
தண்ணீர் எடுக்க வேண்டும்
மரத்துப் போன
உடலென்றாலும் தினம்
குளித்துவிட வேண்டும்

திடிரென்று மரணபயம்
பற்றிக் கொள்ளும் ஆயினும்
மறுநொடியே அதுமாய்ந்துவிடும்.

நமது ஊரில்
தண்ணீர் குறையவில்லை
அழுது முடித்துவிட்ட
காரணத்தினால் நம் கண்ணில்
கண்ணீர்தான் வற்றிவிட்டது.

ஆண்டவனை தொழுது
பல புண்ணியங்கள்
பெற்றாகிவிட்டது

காயிந்து கிடக்கும் நிலங்கள்
போல முகத்தில்
கோடுகள் விழுந்துவிட்டது

சாய்ந்து கொள்ள
மடி கேட்ட காலம்
அது முடிந்துவிட்டது

பொத்திப் பொத்தி
வளர்த்த பிள்ளைகளை
புது உறவு தூக்கிச்சென்றது

பேரப் பிள்ளைகளை
பார்க்க ஆசை தூண்டும்
பாதியென குறைந்துவிட்ட
பார்வையால் வீதிகள்தாண்டி
நடந்துசெல்ல பயம்பற்றிக்கொள்ளும்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
என்றாகிவிட்டது

மீண்டும்மொரு முறை
குழந்தைபருவம் வந்தது
பார்த்துக்கொள்ளத்தான்
பெற்றோர்கள் இல்லை.






Sunday, January 16, 2011

இரண்டாம் பாகம்


வா என்கிறாயா? ஹுஹும்.
போ என்கிறாயா? ஹுஹும்.
மௌனமாகத்தான் இருக்கிறாய்.
எப்பிறவியிலும் உலகத்தின் மீதே காதல்.
கால் மீது கால் உனதுதான்.
இரண்டு கைகளும் ஒவ்வொரு பக்கமாய்.
கருப்பு வெள்ளையில் ஆடை தலைபாகை உட்பட.
எதற்கு இந்த அலங்காரம்?
இந்த இருட்டில் உலகை இரசிக்கிறாயா?
இல்லை மீண்டும் ஒருமுறை
சுதந்திர கீதம் இயற்றுகிறாயா?
எட்டயபுரத்து கவியே
மௌனம் வேண்டாம்.

எத்தனை முறை வாசித்தும்
கண்ணம்மாவின் நினைப்பு மட்டும்
தலை தட்டுகிறது.
மற்ற கவியெல்லாம் பின்னால் தொடர்கிறது.

இனியும் என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?
வேண்டுமென்றால் இதில் ஏதேனும் ஒன்று செய்.

நெற்றிபொட்டில் வைத்து சுடு
கூறிய கத்தியைக்கொண்டு கிழி
பாறை மீது மோதி தள்ளு
எப்பாடு பட்டாவது கொன்று விடு.

ஆனால்
கண்ணம்மாவின் இரண்டாம் பாகம்
இயற்றிவிடாதே!!

Thursday, January 13, 2011

காணும் பொழுதுதான் பொங்கல்




சாய்ந்து கிடக்கும் பரிசலை
நன்றாக தேடி விட்டேன் .

இளம் வயதொத்த காதலர்கள்
எவரும் இல்லை.

தள்ளாடும் வயதில்
மறைத்து வைத்த காதலைச்சொல்லும்
கிழவன் கிழவி இல்லை .

நிழல் தேடி ஒதுங்கும்
எந்தவொரு விலங்கினமும்
இல்லை.

இந்த இடம்
காலியாகத்தான் இருக்கிறது.
என் தேவதை என்னை வேண்டாமென்று ஒதுக்கிய
என் இதயத்தை போல.

இத்தனை வருடங்களாய் காத்திருப்பது போல்
இந்த வருடமும் காத்திருக்கிறேன்
காணும் பொங்கல் அன்று.

ஒன்றுதான் விளங்கிற்று.
எவ்வுறவாயினினும்
களவாடப்படுகையில் சுகம்.
நிராகரிகப்படுகையில் இரணம்.

பொங்கலோ பொங்கல்!!!


பட்டணம் தாண்டி பயணிப்பவர்க்கெல்லாம்
யாதும் ஊரே யாவரும் கேளீர் - குற்றமில்லை
தாய் தமிழ்நாட்டை கவனிக்க மறப்பதே குற்றம்.

நாத்திகம் ஆத்திகம் பேசி திரிபவர்
கோவிலும் அறிவியலும் வளர்த்தே ஓய்ந்தனர் - குற்றமில்லை
மண்ணும் மரமும் வளர்ப்பதை மறப்பதே குற்றம்.

காடும் மேடும் அலைந்து திரிந்து
வெள்ளையன் விதைத்த விசச்செடி அறுப்பவர்கள்
பிள்ளைகளை அதே தொழிலில் சேர்ப்பதே குற்றம்.

பிள்ளைகளை பெற்று பேணி வளர்த்து
பிற மொழி கல்வி கற்பிப்பது தவறில்லை
தாய் மொழி தமிழை தவிர்க்க சொல்வதே குற்றம்.

நாவிற்கு இனிய மொழி தமிழ் மொழி என்பதை
அம்மா என்றழைக்கும் ஆஸ்திரேலியன் மாடு உணர்ந்ததை
நாலு வேலை உண்டு கொளுத்த நாம் உணர மறுப்பதே குற்றம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் - அன்று சொல்லிவிட்டார்
ஏர் பிடித்த கைகளெல்லாம் இன்று காலணா காசாகினர்.

குற்றம் குற்றம் இது கொடுமையான குற்றம்.

எவர் எப்படி இருப்பினும்
எவர் எக்குற்றம் புரினும்
எவர் தவறை உணர்வினும்
அடியேனின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஆங்கிலத்தை வாய்மொழியாக கொண்ட
அனைத்து உலக தமிழர்க்கும்
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!

மழைக்கும் வெயில்லுக்கும் எதிர்பார்ப்பதை மறந்து
இலவசத்திற்கு நிற்கும் தமிழ் உழவர்க்கெல்லாம்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

வேலையோ சூழ்நிலையோ பணமோ மனமோ
எதன் மீது குற்றம் சுமத்துவராயினும்
பொங்கல் பண்டிகையை கொண்டாட வராத
தமிழர்க்கெல்லாம் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!!

Wednesday, January 12, 2011

இருவரும்

இருவரும் காத்திருக்கிறோம்
நீண்டதொரு உரையாடலின் முடிவில்
நிகழும் ஒரு அமைதிக்காக.

இருவரும் அறிந்தது
அவ்வமைதி எதற்காக என்று
அவ்வமைதி அர்த்தமுள்ளது என்று.

இருவரும் அறியாதது
அவ்வுரையாடல் அர்த்தமுள்ளதா என்பதை.

என்ன சொல்ல?
உதிர்ந்த அவ்வார்த்தைகளுக்கே வெளிச்சம்.

Tuesday, January 11, 2011

எப்படிச் சொல்வேனடி


எங்கெங்கு கானினும்
நாம் கரம் பிடித்து நடப்பது போல்தான் தெரிகிறது

ஏதோ ஒரு பிள்ளையின் பெயரை கேட்கும் பொழுது
நாம் நம் பிள்ளைக்கு வைக்க நினைத்த பெயர் நினைவில்வருகிறது

எங்கோ ஒரு பூங்காவில் வந்த சத்தம்
நம் முத்தச் சங்கீதத்தை அரங்கேற்றியது

எவரோ எவருக்கோ கோவிலில் அர்ச்சனை செய்ததால்
நம் முதல் சந்திப்பின் பேரானந்தம் மீண்டும் வந்தது

மோதிர விரலை பார்க்கும் பொழுதெல்லாம்
நம் திருமணம் ஏன் கிருத்துவ முறை படி நடந்ததென்று தோன்றுகிறது

இதெல்லாம் சொல்லத்தெரிந்த எனக்கு
இன்னொன்றை எப்படி சொல்வேன்?

நாளை என்னை கரம் பிடிக்க போகும் பத்தினிக்கு
நான் ராமன் இல்லை என்று?

எதில் அதிகம்




காத்தாடி பறக்க விட
எண்ணிய சிறு வயதில்
மொட்டை மாடி இல்லை
இன்று மாடிகள் பல உண்டு
சிறு வயது நினைவுகள்
வருவது இல்லை.

செல்லச் சிணுங்கல்களை செவி கொடுத்து
கேக்க கடன் பல வாங்கியதுண்டு
இன்று சொந்த கைபேசி உண்டு
சிணுங்கல்களை சிதற விட
காதலி இல்லை.

எதில் இழப்பு அதிகம் என்று
தெரியாமல்
வாழ்க்கை நகர்கிறது!!!

Monday, January 10, 2011

கொடுத்து வெச்சிருக்கணும்




பணி
முடித்து வீடு செல்ல
ஆயுத்தமாகும் பொழுது
அரை மணி நேர வேலை என்று
நமக்கு மூத்தோர் உரைப்பார்.

நாளை விடுப்பை காலையில்
ஞாபக படுத்தும் பொழுது
இரண்டு நாள் வேலையை இன்றே
முடித்து விட்டு செல் என்பார்

நண்பன் வந்திருக்கிறான் மதிய உணவு
அருந்த செல்கிறேன் என்றால்
என்றோ வெற்றியடைந்த ஒரு வேளைக்கு
இன்று குழு உணவு என்பார்

நண்பனின் வாகனத்தை கடன் வாங்கி
இரவு நேர ஆட்டத்திற்கு இரண்டு சீட்டு
எடுத்து வைத்திருந்தால், போகிற வழியில்
என்னை வீட்டில் இறக்கி விடு என்பார்

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை காலி
செய்வது போல் இராஜினாமா கடிதத்தை
கொடுத்தால் ஒ நீயுமா..
நாளை இப்பணிமனையில் தனது கடைசி நாள் என்பார்.

என்ன கொடுமை சரவணன் இது!!!
ஒரு நல்ல மேனேஜர் கிடைக்க....

அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்!!!