நான் போகட்டா..
ம்.. போகாதே..
ஒவ்வொரு நாளும்
விட்டுப்பிரியும் நாளில்
இவை
நீ சொல்வதும்
நான் சொல்வதும்
இரு கைகளில் உன்னை ஏந்திக் கொண்டு
கொஞ்சும் மொழி பேசுவதும்
செல்லமாய் உன் பேர் உரைப்பதும்
கன்னம் கிள்ளி விளையாடுவதும்
எத்தனை பேரானந்தம்.
விரல் தொடுவதும்
பின்கை பிடிப்பதும்
முடி கலைவதும்
அதை நேர்செய்வதும்
எத்தனை இனிமை.
பத்து அறை கொண்ட என் வீடு
ஒரு சிறை போல்தான் தெரியும்,
நான் தனிமையில் இருக்கும் வரை.
நீ வந்து ஒளிந்துகொண்டு
உன்னை தேடும் சமயம்,
ஒவ்வொரு அறையும்
ஓர் அரண்மனை.
நேற்று,
ஓடி வந்து என் மடி அமர்ந்தாய்
எத்தனை பரவசம்.
இதோ,
இன்றென் பேர் உரைத்தாய்
என்னுள்ளே ஆயிரம் வாட் மின்சாரம்.
நாளை,
என்செய்வாய் என்கண்மணியே.
காத்திருப்பேன்,
உன் அம்மா இவ்வாறு உன்னை
விளிக்கும் வரை...
"குழந்தை நாளைக்கு வந்து விளையாடடும்ங்க.
இப்ப கொஞ்ச நேரம் தூங்கட்டும்".

No comments:
Post a Comment