பெரியோர்கள்:கை கூப்பும் ஒருவருக்காக
நாங்கள் ஒவ்வொருவருமே
தெய்வம் ஆகிறோம்;
இன்றொரு நாள்
எங்கள் ராஜ்ஜியம்.
ஆண்கள்:
நாளிதழில் நாளும் தொலைந்து
இன்னல்கள் அலசி ஆராய்ந்து
முடிவில் ஒரு ஆய்வறிக்கை
அவர் விரலில்
ஒரே ஒரு கருப்பு மை
பெண்கள்:
தெரிந்தவர் தெரியாதவர்
அனைவரிடத்திலும் புன்னகை.
வரிசையில் அமைதி
சமையல், வீட்டுவேலை,
குறு-நெடுந்தொடர்
எல்லாம் மறந்து முடிவில்
ஒரு வெற்றி சிரிப்பு.
இளைஞர்கள்:
தோனி முதல் தனுஷ் வரை
மறந்த ஒரு பெருந்தன்மை
கட்டாயம் பள்ளி செல்லும்
சகிப்பு இல்லை
இந்த தேர்வில் பூஜ்யம் இல்லை
ஒற்றை கோடு நூற்றிற்கு சமம்.
நங்கைகள்:
எங்கள் நக க்ரீடங்களில்
விதவிதமாய் வண்ணப்புச்சு
அதில் ஒன்றிக்கு மட்டும்
ஒரு திருஷ்டி பொட்டு.
குழந்தைகள்:
எத்தனை முறை அழுதாலும்
அடம் பிடித்தாலும்
விரல்களுக்கு எட்டாத
ஒரு விளையாட்டு பொம்மை.

No comments:
Post a Comment